வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச. 15) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் நேற்று (டிச.14) நடத்தப்பட்ட போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. 20% தனி இட ஒதுக்கீட்டுக்காக எத்தகைய தியாகத்தைச் செய்யவும் வன்னியர்கள் தயாராக இருப்பதைத்தான் இந்த இன எழுச்சி காட்டுகிறது.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் பல கட்டத் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் கடந்த ஒன்றாம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்த வெற்றியை விஞ்ச முடியுமா? என்ற சவாலுடன்தான் தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மிகக் குறைந்த கால அவகாசத்தில்தான் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது என்றாலும் கூட, எத்தனை ஆண்டுகள் திட்டமிட்டாலும் இப்படி ஒரு வெற்றிகரமான போராட்டத்தைப் பாமகவைத் தவிர வேறு யாராலும் நடத்த முடியாது என்பதைப் பாட்டாளி சொந்தங்கள் நிரூபித்துள்ளனர்; தங்களின் வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் திரள் போராட்டம் காலை 11 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே பாட்டாளிப் படைகள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் நோக்கி போர்முரசு கொட்டிப் புறப்பட்டுவிட்டன. வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் கடந்து பாமகவுக்குச் செல்வாக்கு இல்லை என்று பேசியவர்களின் முகங்களில் கரியைப் பூசும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் பாட்டாளி சொந்தங்கள் திரண்டு சென்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதன் வெற்றி குறித்து எனக்குத் தொலைபேசி செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. பாமக என்ற அரசியல் எல்லையைக் கடந்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், வன்னியர் என்ற சமுதாய எல்லையைக் கடந்து அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காகக் குரல் கொடுத்தனர் என்ற செய்தி எனக்கு வந்து சேர்ந்தபோது பெருமிதத்தில் மிதக்கத் தொடங்கினேன். உணவு நேரத்தையும் மறந்து போராட்ட வெற்றிச் செய்திகளை மாலை வரை கேட்டறிந்து மகிழ்ச்சியில் மூழ்கினேன். இந்தப் போராட்டம் வரலாறு படைத்துவிட்டது.
மக்கள் திரள் போராட்டத்தில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர் என்பதில் யாருக்கும் வியப்பு இல்லை. எப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதில்தான் அதன் சிறப்பு இருக்கிறது. பல இடங்களில் 80 வயதைக் கடந்த இளைஞர்கள் 10 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். பள்ளிக்கூடங்களில் பயிலும் 5 வயது, 10 வயது, 15 வயது மட்டுமே ஆன பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை அவர்களின் பெற்றோர் அழைத்து வரவில்லை; அவர்கள்தான் அவர்களின் பெற்றோரை போராட்டத்திற்கு அழைத்து வந்தனர் என்பதுதான் போராட்டத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததைப் போன்று, விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூரில் இட ஒதுக்கீட்டு தியாகி ஒரத்தூர் ஜெகநாதன் குடும்பத்தைச் சேர்ந்த இயக்குநர் சுபாஷ் சந்திர போசுடன் அவரது வயது முதிர்ந்த தாயார், பால்மணம் மாறாத மகன், மகள் ஆகியோருடன் பிறந்து இரு மாதங்களே ஆன கைக்குழந்தையையும் தோளில் சுமந்தபடியே அவரது மனைவியும் பேரணியில் கலந்துகொண்டு வீறு நடை போட்டு வந்தார். இந்தச் செய்தியைக் கேட்டதுமே நான் மெய்சிலிர்த்துப் போனேன். இதேபோல் இன்னும் பல இடங்களில் கைக்குழந்தைகளுடன் பல சொந்தங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பல இடங்களில் முஸ்லிம்களும் குடும்பங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களுக்கெல்லாம் வார்த்தைகளில் நன்றி சொல்ல முடியாது. இதுதான் பாமகவின் வலிமையாகும்.
போராட்டத்தை வெற்றி பெறச் செய்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த சொந்தங்கள், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சொந்தங்கள், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தகட்டமாக வரும் 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி அலுவலகங்கள் முன் நடைபெறவுள்ள மக்கள் திரள் போராட்டத்திற்கு ஆயத்தமாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்திற்கும், அதைத் தொடர்ந்து, மனு வாங்கும் நிகழ்வுகளுக்கும் சிறப்பான முறையில் ஒத்துழைத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், அவர்களை வழிநடத்திய தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கும் பாமக - வன்னியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் நேற்று நடத்தப்பட்ட மக்கள் திரள் போராட்டம் வழக்கமான போராட்டங்களில் ஒன்றல்ல. தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமுதாய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் 20% தனி இட ஒதுக்கீடு மிகவும் அவசியம்; அதை எங்களுக்கு வழங்குங்கள் என்று அரசுக்கு உணர்த்துவதற்கான இன எழுச்சி ஆகும். வன்னிய மக்களின் இந்த உணர்வைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.