தமிழகம்

ராமேசுவரம் அருகே இந்தி தெரியாததால் கடன் தர மறுக்கும் வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கைது

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில் இந்தி தெரியாததால் வங்கிக் கடன் தர மறுக்கும் வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் அருகே உள்ள மண்டபத்தில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது.

இந்த வங்கியின் மேலாளர் வாடிக்கையாளர்களிடம் விண்ணப்பங்களை இந்தியில் எழுதச் செலால்வதாகவும் இந்தி தெரியாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கடன் கொடுப்பதில் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மண்டபத்தில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை நாம் தமிழர் கட்சியினர் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கண். இளங்கோ தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி தெரியாததால் வங்கிக் கடன் தர மறுக்கும் வங்கி மேலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும், தமிழ் தெரிந்த புதிய மேலாளரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களை மண்டபம் காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.

SCROLL FOR NEXT