தமிழக முதல்வர் தொடங்கிவைத்த மினி கிளினிக் திட்டத்தை பெற்றுத் தந்ததாக திமுக எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுகவினரிடையே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 60 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக 20 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. அதில், விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி, மூளிப்பட்டி, ஆவியூர், இலுப்பையூர், குல்லூர்சந்தை, செம்பட்டி ஆகிய இடங்களில் இம்மாதம் 20-ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியால் மினி கிளீனிக்குகள் தொடங்கிவைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குல்லூர்சந்தை கிராமத்தில் "தமிழக அரசின் மின் கிளினிக் திட்டத்தை கடும் முயற்சி செய்து குல்லூர்சந்தை கிராமத்திற்கு பெற்றுத்தந்த சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு குல்லூர்சந்தை பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து" சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளைப் பார்த்து அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் தொடங்கிவைத்த திட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ.வான சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.