காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித (டி.என்.பி.எல்) நிறுவனத்தார், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற வயல்வெளி கருத்தரங்கம் இன்று (டிச.15) காரைக்கால் மாவட்டம் கீழக்காசாகுடியில் நடைபெற்றது.
தரிசு நிலங்களில் பணப்பயிர் சாகுபடி குறித்து நடைபெற்ற இக்கருத்தரங்கில், தண்ணீர் பற்றாக்குறை, உப்பு நீர் உட்புகுதல், வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பொருளாதாரப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களைத் தரிசாக விட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நிலங்களில் காகிதம் தயாரிக்க உதவும் மரக்கூழ் உற்பத்தி செய்யத் தேவையான யூகலிப்டஸ், சவுக்கு போன்ற பணப்பயிர் ரகங்களை வளர்த்து, டி.என்.பி.எல் நிறுவனத்திடம் விற்று, விவசாயிகள் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மோகனசுந்தரம் என்ற விவசாயினுடைய யூகலிப்டஸ் மரத் தோப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தரிசு நிலங்களில் பணப் பயிர் சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் சுமார் 50 பேர், வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 25 பேர், ஜெயங்கொண்டம் பிரிவு டி.என்.பி.எல். நிறுவன உதவி மேலாளர் சுரேஷ்குமார், வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ஆனந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் ஹரிஹரன், நாவரசு, விஷ்ணுப்பிரியா சிவமங்களா ஆகியோர் கருத்தரங்க நிகழ்வை ஒருங்கிணைத்தனர். மாணவி இந்துஜா நன்றி கூறினார்.