அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு: 97.56% பேர் குணமடைந்தனர்

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த மதிப்பு 37 ஆயிரத்து 550 ஆக உள்ளது. 97.56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (டிச. 15) கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் 3,393 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 24 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 38 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 621 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.65 ஆக இருக்கிறது.

இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 37 ஆயிரத்து 550 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது மருத்துவமனைகளில் 197 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 99 பேரும் என 296 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 47 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 633 (97.56 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 551 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 743 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

இன்னும் 90 நாட்களுக்கு கரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதல் ஆட்கள் தேவை இருக்கிறது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்டு நானும், முதல்வரும், ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்.

ஆட்கள் இல்லாவிட்டால் நினைக்கின்ற பணியை நம்மால் செய்ய முடியாது. கரோனாவுக்கு ரூ.3 கோடியில் இதுவரை ரூ.77 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆகவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT