தமிழகம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு எதிர்ப்பு: கமலின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதிலடி

செய்திப்பிரிவு

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பான கமலின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தக் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கமல் தனது ட்விட்டர் பதிவில், "சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே" என்று தெரிவித்தார்.

கமலின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "பொய் பரப்புவது என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த எல்லையும் தேவையில்லை. கடந்த 9 மாதங்களாக 80 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி/ கோதுமை,1 கிலோ பருப்பு இலவசமாக மத்திய அரசு அளிக்கிறது. யார் பட்டினி இருக்கிறார்கள். மக்களோடு தொடர்பே இல்லாதவரின் பிதற்றலே இது." என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்குப் பல்வேறு பின்னூட்டங்கள் வந்துள்ளன. அதில், "பிறகு எதற்கு புதிய பாராளுமன்றம்" என்ற கேள்விக்கு ஹெச்.ராஜா, "2026-ல் தற்போது உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வளர்ந்துவரும் மக்கள்தொகை அடிப்படையில் உயர்த்தப்பட உள்ளது. இன்றுள்ள 543 உறுப்பினருக்கு மேல் தற்போதைய கட்டிடத்தில் அமர முடியாது. எனவே, தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை" என்று பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT