பிரகாஷ்: கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குகிறது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

செய்திப்பிரிவு

இன்னும் 2 நாட்களில் சென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தொட உள்ளது என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் இன்று (டிச. 15) தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள சென்னை ஐஐடியை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். முழுமையான அளவில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். 10 நாட்கள் கழித்து இரண்டாவது கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வோம். இதே யுக்தியை கையாண்டுத்தான் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நான்கரை லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்டோம். சென்னை ஐஐடியில் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டால் அபாய கட்டத்தை தாண்டிவிடலாம்.

இதே பணிகள் அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய அளவில் தொற்று இருக்காது. ஏனென்றால், இறுதியாண்டு மாணவர்கள்தான் உள்ளனர். இருப்பினும், 100% பரிசோதனைகளை மேற்கொள்வோம்.

இந்த பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தொய்வில்லாமல் இருப்பதால்தான், இன்னும் 2 நாட்களில் சென்னை மாநகராட்சியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தொட உள்ளது. மூன்றில் ஒரு நபருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு 3 லட்சத்தையும் தாண்டி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.

இறப்பு விகிதம் 2.4 சதவீதத்திலிருந்து 1.76% என்ற அளவில் குறைந்துள்ளது. இன்னும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இறப்பு சதவீதத்தை 1% அளவில் கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால் அது பாதுகாப்பான விகிதம்.

முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கணக்கெடுப்புகளை ஆரம்பித்துள்ளோம். தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் சென்னையில் 7,000 சிறிய, பெரிய மருத்துவமனைகள் உள்ளன. அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 1 லட்சம் என்ற அளவில் உள்ளது. அவர்களை கணக்கெடுப்பு செய்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பட்டியல் தயாராகிவிடும். அரசு உத்தரவின் அடிப்படையில் குறுகிய கால அளவில் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடைபெறும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2-3 மாத காலமாகலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். அந்த காலக்கட்டம் வரைக்கும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT