ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் இன்று (டிச.15) சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சென்னை ஐஐடியில் நேற்று வரை 104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 539 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்தோம். விடுதிகளில் உள்ளவர்கள், பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளோம். இதில் இன்று 79 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வரை ஐஐடியில் பரிசோதனை செய்தவர்களில் 25% பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த விகிதம் இன்று 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. 978 மாதிரிப் பரிசோதனைகளில் 25 பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 953 பரிசோதனை முடிவுகளில் இதுவரை 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், அணியாவிட்டால் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் எங்களிடம் அறிவுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்கள், விடுதிகள், மேன்ஷன், பெண்கள் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள முதல்வர் கூறியுள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். ஏற்கெனவே 4 லட்சம் பரிசோதனைகளை அங்கு சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. தேவையற்ற குழு விவாதங்கள், ஆய்வகங்களில் கூடுதலைத் தவிர்க்க வேண்டும். விடுதிகளுக்கே சென்று உணவு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. பொதுமக்களுக்கு இது ஒரு பாடம். நோய்த்தொற்று குறைந்துவிட்டதால் முகக்கவசம் அணிய வேண்டாம் என நினைக்கின்றனர். விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கொள்ளை நோய் சட்டம், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் அரசுத் துறைகள் கெஞ்ச முடியாது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நானும் நேரில் ஆய்வு செய்துள்ளேன்".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT