சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3-வது கட்டமாக நேற்று உதவிப் பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே 2 கட்டங்களாக நிவாரண உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின், நேற்று 3-வது கட்டமாக கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்தார்.
தீட்டி தோட்டம் 1-வது தெருவில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அத்துடன் ரூ.60 லட்சத்தில் இறகு பந்தாட்டக் கூடம், சீனிவாசா நகர்3-வது குறுக்கு தெருவில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட உள்ள விளையாட்டு திடல் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுபோல் பல்வேறு இடங்களுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், 3 ஆயிரத்து 500 பேருக்கு 5 கிலோ அரிசி, பாய், போர்வை, சர்க்கரை, மைதா தலா 1 கிலோ உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.