வன்னியர் சமுதாய மக்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலங்களின் முன்பு பாமகவினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பனங்காட்டுபாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் எம்பி ஏ.கே.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
அவர், "வன்னியர் சமுதாயத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். 4 முதல்வர்களிடம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சேலத்தில் இருக்கும் மாங்கனி முதல்வர் நல்ல கனியை தருவார் என நம்புகிறோம்" என்றார்.
பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாகஅலுவலகத்தில் பாமகவினர் மனு வழங்கினர். இதேபோல்,செங்கல்பட்டு மாவட்டத்தில்363 இடங்களிலும் மற்றும்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 295 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனுக்களை வழங்கினர். பாமகவினர்ஆர்ப்பாட்டத்தால் கிராம நிர்வாக அலுவலங்களின் முன்புபோலீஸார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாமக சார்பில் திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும்மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.இதில் பாமக துணை பொதுச்செயலர்கள் பாலயோகி.கே.என்.சேகர், பிரகாஷ் மற்றும் வெங்கடேசன், தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.