மதுரையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் கனிவுடன் விசாரித்து அவரை காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆட்சியர் இறக்கி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை கோரிப்பாளையம் வயக் காட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா சுல்தான் (77). இவர் ஊன்று கோல் உதவியுடன் ஆட்சியர் அலுவ லகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது அலுவலகம் வந்த ஆட் சியர் த.அன்பழகன் மூதாட்டியைக் கவனித்தவுடன் காரில் இருந்து இறங்கி வந்து, அவரிடம் மனுவைப் பெற்று விசாரித்தார். மூதாட்டியின் வீடு ஒத்தி பணத்தை வீட்டின் உரிமையாளர் திருப்பித் தராமல் இருப்பதை அறிந்தார். பின்னர் மூதாட்டியை தனது காரில் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று செலவுக்கு சொந்தப் பணத்தை வழங்கினார். பின்னர் அதிகாரிகளிடம் அவரது பணத்தை மீட்டுத் தரும்படி உத்தரவிட்டார். இதேபோல கரூரில் பணி ஓய்வுபெற்ற தனது ஓட்டுநரை அவரது வீட்டுக்கே காரில் சென்று ஆட்சியர் விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.