இலங்கை ராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என அந்நாட்டு விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி (திமுக தலைவர்)
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையிலான விசார ணைக்குழு தனது 178 பக்க அறிக்கையை அளித்துள்ளது. இந்த அறிக்கையில், ‘‘உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான். சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டால் ராணுவ வீரர்களின் போர்க்குற்றங்கள் நிரூபணமாகும். இதனை விசாரிக்க இலங்கை சட்ட விதிமுறைக்கு ஏற்ப போர்க்குற்ற பிரிவை அமைக்க வேண்டும். சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கொல்லப்பட்டது குறித்து தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற ஐ.நா.வின் பரிந்துரை ஏற்கத்தக்கது’’ என கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என ராஜபக்ச அமைத்த நீதிபதி மேக்ஸ்வெல் விசாரணைக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் இலங்கையின் நடுநிலையை உணரலாம் எனக் கூறி சர்வதேச விசாரணை தேவையில்லை என இலங்கை அரசு வாதிடலாம். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்)
இறுதிப் போரின்போது அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தி அவர்களின் படு கொலைக்கு காரணமான இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்திய அரசு ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)
இலங்கை ராணுவத்தினர் செய்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உண்மைதான் என அந்நாட்டு அரசு அமைத்த விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.
சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகளும் உண்மை என அக்குழு கூறியுள்ளது. இலங்கை வடக்கு மாகாண சபை, தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என ராஜபக்ச அமைத்த விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.
உள்நாட்டு விசாரணை நடத்தினால் உண்மை குற்ற வாளிகளை கண்டறிய முடியாது. எனவே, தமிழர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்)
ராஜபக்ச நியமித்த விசாரணைக் குழுவே இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை உண்மை என ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட் டோர் இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள் ளனர்.