மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்தும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, மற்றும் பிற கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர், மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான அனுமதியில்லாத நிலையில் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து காங்கிரஸார், விவசாய சங்கத்தினர், சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று திரண்டிருந்தனர்.
அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான புறப்பட்டனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய்வசந்த், மாநகர தலைவர் அலெக்ஸ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், மாவட்ட துணை தலைவர் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ., லீமாறோஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.