டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற விவசாய சங்கங்களை சேர்ந்த 26 பெண்கள் உள்ளிட்ட 164 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 19 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை திரண்டனர்.
இவர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்காக ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால், அனுமதி கிடையாது எனக் கூறி போலீஸார் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையின் அணுகுசாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் நல்லையா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவாக கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினரிடம் எஸ்பி எஸ்.ஜெயக்குமார், ஏடிஎஸ்பிக்கள் கோபி, செலவன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே, அனைவரையும் கைது செய்கிறோம். கைதுக்கு உட்படுங்கள் என போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனால், பல்வேறு மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். எனவே, தங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால், போலீஸார் அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் கைதுக்கு உடன்பட முடியாது என விவசாயிகளும் மறுத்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேர முயற்சிக்கு பிறகு போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். கைதாக மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றிச் சென்று அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர் அருகேயுள்ள மழைநீர் ஓடையில் உள்ள தண்ணீரில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அவர்களையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்ளிட்ட 164 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய சங்கங்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், இந்த போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மயங்கி விழுந்த நல்லகண்ணு உறவினர்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள பிதப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு (85). விவசாயியான இவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பிதப்புரம் கிராம கிளை செயலாளராக இருந்து வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் உறவினரான இவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதற்காக சக விவசாயிகளுடன் வந்திருந்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டபோது மயங்கி விழுந்த நல்லக்கண்ணுவின் உறவினரை விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். படம்: என்.ராஜேஷ்
போராட்டக் குழுவினருடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததால் இவர் சக விவசாயிகளுடன் அந்த பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மயங்கி கிழே சரிந்தார்.
உடனிருந்த சக விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு, உடனடியாக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.