தமிழகம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்; ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு: கமல்ஹாசன்

என்.சன்னாசி

"வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்; ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்" என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெயரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று (டிசம்பர் 13) தொடங்கினார்.

இரண்டாவது நாளான இன்றும் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

ஆளும்கட்சி பதற்றத்தில் இருப்பதாலும், விமர்சனங்களுக்குப் பயந்தும் ஆளுங்கட்சி எனது பிரச்சார பயணத்தில் பேச அனுமதி மறுத்துள்ளது என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ‘ சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் மதுரையில் நேற்று தொடங்கினார்.
இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரையில் தங்கிய அவர் இன்று அழகர் கோயில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுடனும் ஆலோசித்தார். அவர்களிடம் தேர்தல் வியூகம், கட்சியில் சேர்ந்து பணியாற்றுவது குறித்தும் பேசினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் கமலஹாசன் கூறியதாவது:

மதுரையில் நேற்று தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் எழுச்சியாக இருந்தது. இது தொடர்பாக எனது சந்தோஷத்தை தொண்டர்களிடம் ட்விட்டரில் பகிர்ந்தேன்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் மத்தியில் எங்களது நேர்மையை மக்களிடம் சொல்லி தேர்தலை சந்திப்போம். நேர்மையானவர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களுக்கென ஒரு கட்சி ஏன் இருக்கக்கூடாது என்பதற்காக மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தோம். ஆளுங்கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பயந்து, எனது பிரச்சாரத்தில் பேசுவதற்கு தடை விதித்தாலும், அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே எல்லா இடத்திலும் விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. எங்களுக்கான மக்கள் ஆதரவை தடுக்கவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் நானும், ரஜினியும் சாதனை புரிந்துள்ளோம். அரசியலிலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என, ஓராண்டுக்கு முன்பே சொல்லி இருந்தேன். சந்தர்ப்பம் வரும். மூன்றாவது கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது. அது பற்றி விரைவில் அறிவிப்பேன். மதுரையிலுள்ள ஒரு மலைமேல் நின்று சத்தமிட்டால் பரமக்குடிக்கு கேட்கும். ஒருகாலத்தில் மதுரைக்கு வந்த பின்னரே பரமக்குடிக்கு செல்லவேண்டும். அதனால் மதுரையின் மீது எனக்கு அக்கறை அதிகம் என்பதால் 2-வது தலைநகராக மாற்றுவேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கே என்பது பற்றி இப்போது கூற முடியாது. நான் நாத்திகவாதி என்பதைவிட, எதையும் அறிந்து, புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட பகுத்தறிவாளன்.

மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், எங்களது பிரதிநிதிகள் டெல்லிக்குச் சென்று, அவர்களுடன் போராடிவிட்டும் வந்துள்ளனர். நடிகர் என்ற முறையில் எனக்கு மக்கள் கூடுகிறது என்றாலும், அதையும் தாண்டி மக்கள் வருகிறார்கள்.

அப்படி வந்ததால் தான் எம்ஜிஆர் புரட்சித் தலைவரானார். நானும், அவரும் ஒரே இனம் (நடிகர்). அதிமுக அமைச்சர்கள் தூங்கவேண்டும் என்பதற்காக எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் மூன்றாவது தேர்தலை சந்தித்தாலும், எங்களது பயணம் நேர்வழி, நேர்மை. ஊழல் இல்லாத அரசு அமைய முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

ஒரு நாடு, மாநிலம் வளரவேண்டும் என்றால், கார்ப்பரேட்டு கம்பெனிகளும் முக்கியம். இதை வரவேற்கிறோம். எம்ஜிஆரை நான் முன்னிலைப்படுத்தவில்லை. அவர் மட்டுமே எம்ஜிஆர். நான் கமலஹாசன். என்னை கா்ப்பரேட் இயக்குவதாக கூறுவது தவறு. நான் இளைஞராக இருந்தபோது, அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை. நானும், ரஜினியும் கடுமையாக உழைத்த தொழிலிலேயே எங்களுக்குள் போட்டியில்லை. இருவரும் தெளிவான பாதையில் செல்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்குள் ஒப்பந்தம் இருப்பதால் தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது என, மத்திய அரசு விருது வழங்குகிறது. நாங்கள் யாருக்கும் பி-டீம் அல்ல. காந்தியின் பி- டீம் இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் ரஜினியை நாங்கள் 6 மாத்திற்கு கால்சீட்டு வாங்கியுள்ளோம் என்ற கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த கமலஹாசன், ஒருவேளை ரஜினியை வைத்து பாஜக படமெடுக்கும் திட்டத்தில் அவரிடம் கால்சீட்டு வாங்கி இருக்கலாம், என்றார்.
கமலுடன் சந்தோஷ்பாபு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT