கரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக இன்று திறக்கப்பட்டது. 8 மாதங்கள் வருமானமின்றி மெரினா தள்ளுவண்டி வியாபாரிகள் வாடி வருகின்றனர். அவர்களுக்குத் தீர்வு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, பொதுமக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டது.
கரோனா தொற்றிலிருந்து காக்க, பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தளங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் சென்னை நகரில் எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒன்றுகூடும் மெரினா கடற்கரையும் மூடப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் தாழ்த்தியது. இதுகுறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது.
இதையடுத்து கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். டிச.14 அன்று மெரினா கடற்கரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரையில் சர்வீஸ் சாலையில் உள்ள போலீஸாரின் தடுப்புவேலிகள் அகற்றப்பட்டன. சர்வீஸ் சாலை சுத்தம் செய்யப்பட்டது. மழையால் மணல் பரப்பில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
மெரினா கடற்கரை திறக்கப்பட்டாலும், மெரினாவில் எளிய மக்களுக்குப் பயனுள்ளதாகவும், ஏழை வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்த சிறு தள்ளுவண்டிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி மூலம் 900 சிறு தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் மெரினா தற்சமயம் வெறிச்சோடிதான் இருக்கும்.
ஏற்கெனவே கடற்கரைக்கு வரும் பொதுமக்களை நம்பி வாழ்க்கையை நகர்த்தி வந்த சிறுகடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் நிலை குறித்து சென்னை மாநகராட்சி என்ன முடிவு எடுக்க உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடற்கரை நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்து 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை டெண்டர் விடாமல் சமீபத்தில்தான் டெண்டர் விடப்பட்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 900 தள்ளுவண்டிக் கடைகளைத் தயாரிக்கும் பணி இரண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவை நடைமுறைக்கு வரவும், டெண்டர் பணிகள் முடிக்கவும் மாதக்கணக்கில் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மெரினாவில் ஏற்கெனவே வியாபாரம் செய்துவந்த தள்ளுவண்டிக்காரர்கள், சிறு வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள எலியட்ஸ் பீச் சிறுகடை வியாபாரிகள், வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரி கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
கடற்கரைக்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் என்ன நடைமுறை, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.