ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

மெரினா கடற்கரை திறப்பு; கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மெரினா கடற்கரை திறப்பு என்பது மக்கள் நலன் கருதியே. எனவே, பொதுமக்கள் கரோனா பரவலை மனதில் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையோடு தமிழக அரசின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச.14) வெளியிட்ட அறிக்கை:

"மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது அழகான நீளமான கடற்கரையாகத் திகழ்கிறது. சென்னை மக்களும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் தங்கள் பொழுதுபோக்குக்காக அதிக அளவில் கூடும் இடமாக மெரினா கடற்கரை திகழ்கிறது. மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை அளிக்கும் இடமாக கடற்கரை விளங்குகிறது. கரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த மெரினா கடற்கரைக்கு கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான நல்ல செய்தி. இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்போடு இருந்து தங்கள் நலன், நாட்டு நலன் கருதி அதன் அடிப்படையில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையோடு, தமிழக அரசின் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து, குறிப்பாக, கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

மெரினாவில் செயல்படும் உணவகங்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை மாநகராட்சி வலியுறுத்தி முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அதோடு, மிக முக்கியமாக கிறிஸ்துமஸ், ஆங்கில புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை என்று தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

தமிழக அரசு கடந்த 9 மாதங்களாகக் கரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய மிகச்சவாலான பணியையும் அதில் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டிருக்கும் துறைகள் சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அனைத்துப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய அர்ப்பணிப்பான சேவையையும் கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டையும் கோட்பாடுகளையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் தமிழக அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலே பண்டிகை நாட்களுக்கு முன்னாலும் பின்னாலும் பொதுமக்களுக்குக் கடற்கரையில் அனுமதியில்லை என்று அறிவிக்கலாம்.

ஆகவே, லட்சக்கணக்கானோர் கூடும் இடத்தில் மெரினா கடற்கரையைத் தமிழக அரசும் மாநகராட்சியும் சோதனை ஓட்டமாக ஒருவார காலம் கண்காணிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT