தமிழகம்

கம்பி, சிமென்ட் விலை 20 சதவீதம் உயர்வு: கட்டுமானப் பணிகள் கடும் பாதிப்பு

செய்திப்பிரிவு

இரும்புக் கம்பி, சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானத்தில் ஒருசதுரஅடி விலை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,150 ஆக உயர்ந்துள்ளது என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானப் பணிக்கு இரும்புக் கம்பி, சிமென்ட் முக்கியமான மூலப்பொருட்கள் ஆகும். இவற்றின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரி வித்தன.

இதுகுறித்து, கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் கூறியதாவது:

இரும்புக் கம்பி கடந்த மாதம் ஒரு டன் ரூ.48 ஆயிரமாக இருந்தது.தற்போது ரூ.58 ஆயிரமாக விற்கப்படுகிறது. ஒரு மாதத்தில் ரூ.10 ஆயிரம் (20 சதவீதம்) அதிகரித்துள்ளது. 3 மாதத்துக்கு முன்பு சிமென்ட்ரூ.280-க்கு விற்றது. தற்போது ரூ.330-க்கு விற்கிறது. சிமென்ட் விலையும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரும்புக் கம்பி விலை உலகஅளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று விளக்கம் அளிக்கக் கோரி கிரெடாய், பில்டர்ஸ் அசோசியேஷன், பெரிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களின் சங்கங்கள், சிசிஐ என்ற அரசுஅமைப்புக்கு மனு தாக்கல் செய்துள்ளனர். இரும்புக் கம்பி தயாரிப்புக்கான இரும்புத் தாது, ஸ்கிராப் ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால்இரும்புக் கம்பி விலை உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் விலை ஏற்றம் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கின்றனர்.

இரும்புக் கம்பி விலை ஏன் உயர்த்தப்பட்டது என்று அதன் தயாரிப்பாளர்களிடம் இந்திய அரசு உரிய விளக்கத்தை பெற்று சிசிஐ-யில் மனு கொடுத்துள்ளவர்களுக்கு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்கும். ஒரு காலத்தில் கட்டுமான தொழிலில் ஆற்று மணல் பிரச்சினை பெரியதாக இருந்தது. தற்போது எம்-சாண்ட் பயன்பாட்டால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.

உள்கட்டமைப்பு வேலை நிறுத்தம்

நியாயமான விலையில் எம்-சாண்ட் தேவையான அளவு கிடைப்பதால் மணல் பிரச்சினை இப்போது இல்லை. இரும்புக் கம்பி, சிமென்ட் விலை உயர்வால் ஒரு சதுரஅடி கட்டுமான விலை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,150 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக உள்கட்டமைப்பு வேலைகளை ஒப்பந்ததாரர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு நந்தகுமார் தெரி வித்தார்.

SCROLL FOR NEXT