சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிபிஐ தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் சுரானா என்ற தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம் உள்ளது. தங்க இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, 2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்தே சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பல்வேறு வங்கிகளிடம் சுரானா நிறுவனம் பெற்ற ரூ.1,160 கோடியை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ 864 கிராம் எடையுள்ள தங்கத்தைக் காணவில்லை. மாயமான தங்கத்தை கண்டுபிடிக்கும் பொறுப்புதற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை ஒருபுறம் நடந்தாலும், சிபிஐ அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.