நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்ற மாணவி 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் அளித்துமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவி மற்றும் பல் மருத்துவரான தந்தை மீது 5பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டுஅரங்கில் கடந்த நவ.18-ம் தேதிதொடங்கி நடந்து வருகிறது.
இதில், கடந்த 7-ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஒரு மாணவி பங்கேற்றார்.
அவரது அழைப்புக் கடிதம், ரேங்க் பட்டியலை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அது போலி என தெரியவந்தது. நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் நேற்றுமுன்தினம் இரவு புகார் கொடுத்தார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் பல் மருத்துவரான தந்தை ஆகிய 2 பேர் மீதும், ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணங்களை தயார் செய்தது உட்பட 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேண்டும் என்றே இதுபோல மோசடி நடைபெற்றதா, அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதிப்பெண் முரண்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. திட்டமிட்ட மோசடி என்றால், இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.