ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (டிச.14) தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு டிச.25-ம் தேதி நடைபெறுகிறது.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (டிச.14) தொடங்கி 2021 ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அக்.18-ம் தேதி ஆயிரங்கால் மண்டபம் அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது.இன்று திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. நாளை முதல் டிச.24 வரை பகல் பத்து உற்சவமும் டிச.25 முதல் ஜன.3 வரை ராப்பத்து உற்சவமும் நடைபெறும். சொர்க்கவாசல் திறப்பு டிச.25-ல் அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும். ஜன.4-ல் நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடையும்.
டிச.24 மாலை 6 மணி முதல் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் டிச.25 காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் (டிச.15 முதல் ஜன.4 வரை) மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றுக்கு கோயிலின் www.srirangam.org (http://srirangam.org>>e-Seva) என்ற இணையதள முகவரியில் இலவச மற்றும் கட்டண தரிசனத்துக்கு (குறிப்பிட்ட நேரத்தில்) முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற கோயிலின் யூடியூப் சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம்.