கரோனா ஊரடங்கு தளர்வால் 9 மாதங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையை அடுத்துள்ள குரங்கு அருவியில் குளிக்க நேற்றுமுதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் ஆழியாறு அணையை அடுத்துள்ள வில்லோனி வனப் பகுதியில் குரங்கு அருவிக்கு, வால்பாறையை சுற்றியுள்ள சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட், கவர்கல் எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து, சோத்துப்பாறை என்ற இடத்தில் சிற்றாறாக மாறி வில்லோனி பகுதியில் குரங்கு அருவியாக, 80 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறது. குரங்கு அருவிக்கு கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும், குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வாலும், வால்பாறை மலைப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததாலும், குரங்கு அருவியில் குளிக்க நேற்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அருவியில் மிதமான வேகத்தில் தண்ணீர் கொட்டி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.