தமிழகம்

உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல்: பழமையான கோயில்கள் புனரமைப்பை அரசு கண்காணிக்குமா?

இரா.ஜெயப்பிரகாஷ்

உத்திரமேரூரில் உள்ள பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் 565கிராம் எடையுள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தக்கோயில் புனரமைப்பு பணிக்காக இடிக்கப்படும்போது கிடைத்த தங்கப் புதையலை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எடுத்துச் சென்றனர். அதை வருவாய் துறை கைப்பற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூரில் குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் முற்றிலும் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து திருப்பணிகளைச் செய்யமுடிவு செய்து, கடந்த 10-ம் தேதிபாலாலயம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிதிலமடைந்த கோயிலை இடித்து கோயிலின்படிக்கட்டுகளை அப்புறப்படுத்தினர்.

அப்போது படிக்கட்டுகளுக்கு கீழே பெட்டி போன்ற அமைப்பு இருந்தது. அதில் தங்கக் காசுகள், ஆபரணங்கள், தங்கத்தால் ஆன மணிகள், தகடுகள் ஆகியவை இருந்தன. இதுகுறித்து திருப்பணிக் குழுவினரிடம் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் எடை போட்டு பார்த்தபோது 565 கிராம் அளவுக்கு தங்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவற்றை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினர். இது தொடர்பாக தகவல் அறிந்த வருவாய் துறையினர் புதையலை கைப்பற்ற சம்பவ இடத்துக்கு வந்தபோது, புதையலை தர மறுத்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வருவாய் துறையினர், "2 மணி நேரத்துக்குள் புதையலை ஒப்படைக்காவிட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.

சாமியாடிய பெண்

இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென்று அருள் வந்து ஆடினார். பொதுமக்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொள்ள, "இது இளவரசியின் நகை. கோயிலுக்கு கொடுத்த இந்த நகையை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்ற பொதுமக்களில் சிலர், "சாமியே கூறிவிட்டது; இதை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்" என்று ஆவேசமாகக் கூற அதிகாரிகள் செய்வதறியாமல் விழித்தனர்.

இதைத் தொடர்ந்து கூடிப் பேசிய அந்தக் பகுதி முக்கியப் பிரமுகர்கள், கோயில் திருப்பணிக் குழுவினர், இந்த நகைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என்றும், கோயிலை கட்டி முடித்தபின் இந்த நகைகளை இதே கோயிலுக்கு வழங்க வேண்டும் அல்லது கோயில் கட்டுமானப் பணிக்கு அரசு உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பது என்றும் முடிவு செய்தனர். இதன்பின்னர் இந்த புதையல் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசு கண்காணிக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர் கால அரசர்கள் கட்டிய, விரிவுபடுத்திய பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் பலவற்றை அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருகிறது. ஆனால், சிலகோயில்கள் பராமரிக்க ஆள் இல்லாமல் உள்ளன. குழம்பேஸ்வரர் கோயிலும் அப்படித்தான் உள்ளது. பழங்கால கோயில்கள் அரசர்கள் காலத்தில் அரசு கஜானாக்கள், நகைகளை பாதுகாக்கும் இடமாகவும் செயல்பட்டு வந்தன.பிற மன்னர்களின் படையெடுப்புகளின்போது நகைகளை பாதுகாக்க கோயில்களில் பதுக்கி வைத்ததாகவும் வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நகைகள் மட்டுமல்லாமல் பழங்கால கோயில்களில் மன்னர்களின் வரலாற்றை அறிய உதவும்கல்வெட்டுகள், அரிய சிலைகள், நினைவுப் பொருட்கள் ஆகியவையும் புதைந்து கிடக்கின்றன. இவை கோயில் புனரமைப்பின்போது தெரியாமல் சேதப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. புதையல்கள் கிடைத்தாலும் எவ்வளவு கிடைத்தது என்பதை எடுப்பவர்கள் கூறி கொடுப்பதையே வருவாய் துறையினர் ஏற்க வேண்டியுள்ளது.

எனவே, மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோயில்களை புனரமைக்கும்போது அவற்றை வருவாய் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் கண்காணிக்க வேண்டும். கோயில்கள் இடிக்கப்படும்போது கிடைக்கும் அரிய பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT