தமிழகம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான முக்கிய ஆவணங்களை திரட்டும் பணி தீவிரம்: சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

செய்திப்பிரிவு

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி அதிகாலை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சித்ராவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், சக நடிகர், நடிகைகளும் குற்றம்சாட்டியிருந்தனர். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துதற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்ய இன்று (14-ம் தேதி) காலை 11 மணி அளவில், தன் விசாரணையை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்குகிறார். இன்று சித்ராவின் பெற்றோரிடம் விசாரணையை நடத்தும் அவர், நாளை (15-ம் தேதி) ஹேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருகிறோம். அதில், கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT