தமிழகம்

2 ஜி வேகத்தை குறைத்து 3 ஜி, 4 ஜி-க்கு இழுக்க முயற்சி - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

அரசின் இலவச பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

சென்னை

அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்தை கணக்கிட்டு வழங்கப்படும் நிலையில், அந்த காலகட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் விடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக திருவொற்றியூரைச் சேர்ந்த வாசகர் ஒருவர் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகின்றன. நான் கடந்த 2011-ம் ஆண்டில் மணலியில் இருந்தேன். 2012-ம் ஆண்டு இறுதியில் அங்கிருந்து மாறி திருவொற்றியூர் ஜோதி நகர் வந்துவிட்டேன்.

தற்போது வரை எனக்கு அரசின் இலவச பொருட்கள் கிடைக்கவில்லை. திருவொற்றியூரில் எங்கள் பகுதி கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது 2011-ம் ஆண்டு ரேஷன் கார்டில் இருந்த முகவரி அடிப்படையில் மட்டுமே இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றனர்.

எனவே, நான் மணலிக்கு சென்று கேட்டபோது அங்குள்ள பட்டியலிலும் எனது பெயர் இல்லை. பலருக்கு இதுபோல் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘2011 ஜூன் மாத நிலவரப்படி அந்தந்த பகுதியில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு, ரேஷன் கடையில் இருந்து அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே இலவச பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு மேல் கார்டு வாங்கியவர்களுக்கு கிடையாது. ரேஷன் கடையில் கார்டுதாரர்கள் விவரங்களை கேட்கும்போது அவர் அளித்திருந்தால் விடுபட்டிருக்காது’’ என்றார்.

***

குடும்ப அட்டை முகவரி மாற்றுவதில் தாமதம்

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்து வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட பெருங்குடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு களில் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தங்களின் குடும்ப அட்டையை, தற்போதுள்ள முகவரிக்கு மாற்றுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப் பித்து ஓர் ஆண்டு ஆகியும் முகவரி மாற்றம் செய்யாமல், வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, ‘‘பணி மாற்றம் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், புதிதாக குடியேறியவர்கள், பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக குடும்ப அட்டையில் முகவரி மாற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். ஆனால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் முகவரி மாற்றம் தொடர்பாக வரும் நபர்களை, பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். அதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்’’என்றார்.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது, ‘‘முகவரி மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. எனினும், பெருங்குடிவாக்கம் பகுதியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

***

2 ஜி வேகத்தை குறைத்து 3 ஜி , 4 ஜி-க்கு இழுக்க முயற்சி

சென்னை

3ஜி மற்றும் 4ஜி சேவையை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் முயற்சியாக தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் 2ஜி வேகத்தை குறைப்பதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த வாசகர் செந்தில் என்பவர் ‘தி இந்து’உங்கள் குரலில் கூறியதாவது: நான் கடந்த பத்து வருடங்களாக தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகிறேன். 2ஜி இணைய சேவையை வைத்துள்ளேன். நான் உபயோகிக்கும் நிறுவனத்தார் சில மாதங்களுக்கு முன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினர். 4ஜி சேவை அறிமுகமானது முதல் 2ஜி இணைய சேவையின் வேகம் குறைந்தது. இது வாடிக்கையாளர்களை 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை நோக்கி இழுக்கும் யுக்தியாக பயன்படுத்துகின்றனர். இதனை நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதுபற்றி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் சென்னை பிரிவு வர்த்தக தொடர்பு அதிகாரியிடம் கேட்ட போது, “2ஜி சேவை வேகத்தை குறைத்து 3ஜி, 4ஜி-யை பயன்படுத்த வைக்கும் யுக்தி எதையும் நிறுவனங்கள் பின்பற்றவில்லை. திட்டமிட்டு எதுவும் செய்யப்படுவதில்லை. சிக்னலை பொறுத்துதான் இணைய வேகம் மாறுபடும்” என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

SCROLL FOR NEXT