தமிழகத்தில் ஆன்மிக அரசியல் அமைய வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் வேல் வழிபாடு மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது அரசியல் சூழ்நிலை மாறி இருக்கிறது. மக்கள் ஆன்மிக அரசியலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் அமைய வேண்டும். வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் ரஜினிகாந்த் தலைமையிலான ஆன்மிக அரசியல் அணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இந்து மக்கள் கட்சி துணை நிற்கும்.
தமிழகம் முழுவதும் மற்ற கட்சிகளில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் அனைவரும் ரஜினிகாந்தின் பக்கம் அணி திரண்டு வருகிறார்கள்.
அனைத்து நல்ல சக்திகளையும் அரவணைத்து செல்வது தான் ஆன்மிக அரசியல். எனவே, ஆன்மிக அரசியலுக்கு திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் போட்டி இல்லை. ஆன்மிக அரசியல் போர் வீரர்களாக இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.