ஆன்மிகத்தைக் கொண்டுதான் திமுகவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக தோற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கூறினார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வேலூருக்கு இன்று வந்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
''இந்தியாவில் 65 சதவீதமாக இருந்த விவசாய உற்பத்தி தற்போது 16 சதவீதமாகக் குறைந்துவிட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்குப் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படாததால் விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலம், நீர், காற்று என பஞ்ச பூதங்களிலும் ஊழல் நடைபெற்றது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எதையுமே காங்கிரஸ் கூட்டணி விட்டு வைக்கவில்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்பனை செய்ய முடியும். ஆதார விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் சட்டங்களாகும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும். இடைத்தரகர்களுக்கு இங்கு வேலை இல்லை. நாடு முழுவதும் தாலுக்கா அளவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளைப்பொருட்களைக் குளிர்பதனக் கிடங்குகளில் பதப்படுத்தி, உரிய விலை வரும்போது விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வேளாண் சட்டங்களை சில அரசியல் கட்சியினர் போலியான தோற்றத்தை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் என்ற பெயரில் பெரிய கலவரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், இடைத்தரகர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். போலியான தகவல்களை நம்பி விவசாயிகள் ஏமாறக்கூடாது, போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் குறித்து எதுவுமே தெரியாது. யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை அப்படியை பேசி வருகிறார். ஆன்மிகத்தைக் கொண்டுதான் திமுகவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக தோற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். அவரது தந்தை கட்டிய வீட்டிலா அவர் வசித்து வருகிறார். காலத்துக்கு ஏற்ப பழைய வீட்டை அவர் மாற்றியமைக்கவில்லையா. புத்திசாலி என நினைத்து கமல்ஹாசன் பேசி வருகிறார். நாட்டில் யார் பட்டினியாக இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். சினிமாவில் பேசும் வசனத்தை அரசியலில் பேசக்கூடாது.
தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரையில் இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். ரஜினி அரசியல் கட்சி தொடங்க உள்ளதை வரவேற்கிறோம். சீமானே அரசியல் கட்சி நடத்தும்போது, நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதில் தவறு ஒன்றும் இல்லை. வரும் ஜனவரி 3-ம் தேதி பாஜக சார்பில் அணிகள் மாநாடு வேலூரில் நடைபெற உள்ளது’’.
இவ்வாறு நரேந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெகன்நாதன், சரவணகுமார், பொதுச் செயலாளர்கள், பாஸ்கர், எஸ்.எல்.பாபு, மாவட்டச் செயலாளர்கள் சரவணன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.