ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட் டங்களில் உள்ள மன்னார் வளைகுடா தீவுகளில் இரண்டு தீவுகள் முன்னரே மூழ்கிவிட்ட சூழலில், மேலும் ஒரு தீவு வேகமாக மூழ்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளை குடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. 1986 ஆம் ஆண்டு கடல்வாழ் தேசியப் பூங்காவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பின்னர், 1989 ஆம் ஆண்டு கடல்வாழ் உயிர்கோளக் காப்பகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான சிங்கில் தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலி புட்டி தீவு, முயல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, தலையாரி தீவு, பூவரசன் பட்டி தீவு, அப்பா தீவு, வாலி முனை தீவு, ஆனையப்பர் தீவு, நல்லதண்ணி தீவு, புலுவினி சல்லி தீவு, உப்புத் தண்ணி தீவு, விலங்கு சல்லி தீவு, காரைச்சல்லி தீவு, காசுவார் தீவு, வான் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 தீவுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 தீவுகளும் அமைந்துள்ளன.
அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்
இந்தத் தீவுகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள், கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே 4,223 கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன.
தீவுகளுக்கு ஆபத்து
கடல் சூழலிலும் கடற்கரை பாது காப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகள் அண்மைக்காலமாக பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. 21 தீவுகளில் கீழக்கரை அருகே உள்ள பூவரசன்பட்டி தீவு மற்றும் தூத்துக்குடி அருகே உள்ள விலங்குசல்லி தீவு ஆகிய இரண்டும் ஏற்கெனவே மூழ்கி விட்டதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் 1986 ஆம் ஆண்டு 16 ஹெக்டேராக இருந்த வான் தீவின் பரப்பளவு தற்போது 5 ஹெக்டேராக சுருங்கி இருக்கிறது என்றும் இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் வான் தீவு முற்றிலும் மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது,
2004-ம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்பட்டபோது இந்த மன்னார் வளைகுடா தீவுகள் அரணாகத் திகழ்ந்ததால் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. தீவுகள் மூழ்குகின்றன என்றால் கடல்மட்டம் உயர்கிறது என்று அர்த்தம். இது ஏதோ கடல் சார்ந்த பிரச்சினை, இதனால் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு வராது என்று கருதிவிடக்கூடாது.
இது நேரடியாக கடலோர மாவட்டங்களில் உள்ளவர்களின் வாழ்விலும் வரும் காலங்களில் தாக்கம் செலுத்தக் கூடியது. மன்னார் வளைகுடா தீவுகளை பாது காக்க மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தீவுகளைச் சுற்றி பவளப்பாறை மறு உருவாக்கம் மற்றும் செயற்கை பவளப்பாறை நிறுவுதல் போன்ற திட் டங்களை மேற்கொள்வதன் மூலம் தீவுகள் மூழ்குவதைத் தடுக்க முடியும் என்றார்.