ராஜஸ்தான் பெண்களுக்கு மாடித் தோட்டம் பற்றி பயிற்சியளிக்கிறார் தனசெல்வி. 
தமிழகம்

காலத்தின் கட்டாயத் தேவை மாடித் தோட்டம் 

செய்திப்பிரிவு

தோட்டம் துரவு என்றிருந்த பாட்டன், முப்பாட்டன் காலம் எல்லாம் மாறிபோய் அடுக்கங்களிலும், ஒண்டுக் குடித்தனங்களிலும் அடங்கியிருக்கும் காலம் இது. ஆனாலும், நமக்கு அந்தத் தோட்டத்து ஆசையின் மிச்ச சொச்சம் தொற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு ஆசையில், பண்ருட்டியைச் சேர்ந்த தனசெல்வி என்பவர் மாடிவீட்டுத் தோட்டம் அமைப்பது, இயற்கை விவசாய விளை பொருட்களை உற்பத்தி செய்வது, அதற்கான உரம் தயாரிப்பது உள்ளிட்டப் பணிகளை தான் ஒருங்கிணைத்து வரும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் மேற்கொண்டு வருகிறார்.

தன் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் இது சார்ந்த பயிற்சியை அளித்து வருகிறார். இவரின் செயல்பாட்டைக் கண்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வெளி மாநிலங்களுக்குச் சென்று பெண்களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பை அளிக்க, பண்ருட்டியில் இருந்து சென்று, அதை வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறார் தனசெல்வி. இதைப்பற்றி அவரே கூறுகிறார்.

“சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மகளிர் தெரசா வளாகத்தில் இருக்கிறவங்க, இதுக்கு வழிகாட் டினாங்க. மத்தியப்பிரதேசம், ஜம்மு, ராஜஸ்தான், குஜராத், டெல்லி வரைக்கும் வெளி மாநிலங்களுக்கு போய் அங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாடி வீட்டுத் தோட்டம் பயிற்சி அளிச்சிட்டு வந்திருக்கேன். கூடவே, இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் கத்து குடுத்திட்டு வந்திருக்கேன்.

இப்ப இருக்குற சூழல்ல நமக்குத் தேவையான காய்கறிகளை, ரசாயன கலப்பில்லாம நாமளே பயிர் வச்சிக்கிறது ரொம்ப நல்லது. இதுக்கெல்லாம் பெருசா இடம் வேணும்னு நினைச்சிட்டு இருந்த, என் நினைப்ப மாத்தி, அதுபத்தி மத்தவங்களுக்கும் பயிற்சி கொடுக்க வச்ச மகளிர் மேம்பாட்டு ஆணையத்துக்கும், அதுக்கு வழி நடத்தின மாவட்டமகளிர் திட்ட நிர்வாகத்துக்குத்தான் நன்றி சொல்லணும்” என்கிறார்.

SCROLL FOR NEXT