25 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் அவர்களை ஒருவித கேலிக்குரிய, பாலியல் சுகத்துக்கான கண் ணோட்டத்திலேயே சமூகம் பார்த்து வந்தது. அவர்கள், மனித சமுதாயத்தின் 3-ம் பாலினம். அவர்களில் பெரும்பாலானோர் `உடலால் ஆண், உள்ளத்தால் பெண்' என்ற புரிதல் ஏற்பட்ட பின்னரே அவர்களுக்கும் சமூகத்தில் சற்றே அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
அடையாள அட்டை, குடும்ப அட்டை, திருநங்கைகளுக்கான நலவாரியம், வாக்களிக்கும் உரிமை போன்றவை அவர்களுக் கென்று ஏற்படுத்தப்பட்ட பின் அவர்களும் தயக்கமில்லாமல் தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர். இதிலும் சிலர் விதிவிலக்காக, தங்கள் பிரச்சினைகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு அரசுப் பணியை ஏற்று சாதித்து வருகின்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும் திருநங்கைகளை விலக்கி வைக்கும் நிலையே தொடர்கிறது. இதனாலேயே மனம் வெறுத்து, வீடுகளை விட்டு வெளியேறி குழுவாக ஒன்றிணைந்து வசித்து வருவகின்றனர். இந்தச் சூழலில் சமீப காலமாக ஒரு சில இடங்களில், திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் அரவணைத்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அப்படியான நபரில் ஒருவர் விருத் தாசலத்தைச் சேர்ந்த லெட்சுமி என்ற திருநங்கை, இவர் தனது தாய் தந்தை, சகோதர, சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.
“சில வருடங்கள் மும்பையில் வசித்து வந்தேன். குடும்பச் சூழல் கருதி என் வீட்டிற்கே வந்து விட்டேன். பெற்ற பிள்ளைகளை நாமே ஒதுக்கி வைப்பது அவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை என் பெற்றோரும் உணர்ந்து விட்டனர். என்னால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உறு துணையாக இருக்கிறேன். அவர்களும் என்னுடன் பாசத்தோடும், அன்போடும் தான் இருக்கின்றனர்.
என்னைப் போன்ற பலர் குடும்பத்தோடு இணைந்து வாழும் நிலை உருவாகி வருவதற்கு எங்களது பாலினம் குறித்த புரிதல் ஏற்பட்டிருப்பது தான் காரணம். இந்தச் சமூகம் எங்களை முழுமையாக அங்கீகரித்து, வேலைவாய்ப்பு அளித்தால் கடை கடையாகச் சென்று வசூல் செய்வது மாதிரியான செயல்களில் ஈடுபடுவது குறையும்” என்கிறார்.