துறைமுகத்தில் தேங்கி உள்ள கன்டெய்னர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சரக்குப் பெட்டகமுனைய கூட்டமைப்பிடம் சென்னை துறைமுகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர், சரக்குப் பெட்டக முனைய கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
அண்மையில் வீசிய ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக சென்னை துறைமுகத்தின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கன்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், துறைமுக சரக்கு முனையத்தில் கன்டெய்னர்களின் தேக்கம் அதிகரித்துள்ளது.
எனவே, வர்த்தக நலனைக் கருத்தில்கொண்டு, துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை விரைவாக வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு வெளியே சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைத்து, சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் உள்ளூர் காவல் துறையுடன் துறைமுகம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள், சரக்குகளை இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும்போது காலியாக செல்கின்றன. எனவே, திரும்பி செல்லும் போதும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல, அனைத்து சரக்குப் பெட்டக முனையங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க சரக்குப் பெட்டக முனைய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சில டிரெய்லர்கள் இரண்டு கன்டெய்னர்களை கொண்டு செல்லும் திறன் இருப்பினும், ஒரே ஒரு கன்டெய்னரை மட்டுமே எடுத்துச் செல்கின்றன. எனவே, இந்த டிரெய்லர்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப 2 கன்டெய்னர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.