கரோனா ஊரடங்குக்கு பின்னர்கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புனலூர், சென்னை ரயில்கள் நிற்காமல் செல்வதால் வர்த்தகர்கள், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமான கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள், கடலைமிட்டாய், பட்டாசு உற்பத்தி, விவசாயம், நூற்பாலைகள் என தொழில்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளும் அதிகம் உள்ளன.இவற்றுக்கு வருபவர்கள் மற்றும்ராணுவத்தினர், தொழில் நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு செல்வோர், மருத்துவ சிகிச்சைக்காக இங்கிருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்குச் செல்பவர்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
கோவில்பட்டி ரயில் நிலையம் வழியாக தினமும் 27 பயணிகள் ரயில்கள் இருமார்க்கத்திலும் சென்று வந்தன. மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு மூலம் தினமும் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டித் தந்தது. ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் பெற்றுத் தந்ததால் மதுரை கோட்டத்தில் ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளது.
இந்த ரயில் நிலையம் வாயிலாககோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், சங்கரன்கோவில், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள் பயணம் செய்து வந்தனர். நாகர்கோவில் - சென்னை (எண் 06064) விரைவு ரயில் இயக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை கோவில்பட்டியில் நிற்காமல் செல்கிறது.
இந்நிலையில், கரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது 75 சதவீத ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ஏற்கெனவே கோவில்பட்டியில் நின்று சென்ற ரயில்கள் கூட தற்போது நிற்காமல் செல்கின்றன.
மதுரையில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்படும் புனலூர்விரைவு ரயில் (எண் 06731, 06730),நாகர்கோவில் - கோவை விரைவு ரயில் (எண் 02667), சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவு ரயில் (எண் 02633) ஆகியவை கோவில்பட்டியில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ‘‘கரோனா சிறப்பு விரைவு ரயில் என்ற பெயரில் மத்திய அரசு பிரதான ஊரான கோவில்பட்டியை புறக்கணித்து இயக்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுரை - புனலூர் ரயில் மூலம்கோவில்பட்டி பகுதி மக்கள் கேரளாவுக்கு வணிகம், மருத்துவம் தொடர்பாக சென்று வர ஏதுவாக இருந்தது.ஆனால், கரோனா ஊரடங்குக்கு பின்னர் அந்த ரயில் கோவில்பட்டியில் நிற்காமல் செல்வதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், வாரந்தோறும் புதன், வெள்ளியன்று இயக்கப்படும் டெல்லி - கன்னியாகுமரி நிஜாமுதீன் விரைவு ரயில் (எண் 06012) வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் நாகர்கோவில் - சென்னை (எண் 06064) விரைவு ரயில் ஆகியவையும் கோவில்பட்டியில் நிற்பதில்லை. எனவே, கோவில்பட்டியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்’’ என்றார்.