தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் நிலம் வகைப்பாடு தொடர்பான மாஸ்டர் பிளானை இணையதளத்தில் வெளியிடக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் சூரங்கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நில விற்பனையில் மோசடி நடைபெறுகிறது. சாலை பயன்பாட்டிற்கான நிலத்தை பலர் கட்டிடப் பகுதி என்று கூறி விற்று வருகின்றனர்.
இவ்வாறு பொதுமக்கள் நிலங்கள் வாங்கும் போது ஏமாற்றப்படுகின்றனர். நகரங்களின் மாஸ்டர் பிளான் விவரம் தெரியாமல் பலர் சுலபமாக நிலங்களை வகைமாற்றம் செய்து விற்கின்றனர்.
ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் பிளான் மாற்றம் செய்யப்படும். ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக மாஸ்டர் பிளான் மாற்றம் செய்யப்படுவதில்லை.
எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க தமிழகத்திலுள்ள நகரங்களிலும் புதிய மாஸ்டர் பிளானை உடனடியாக தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தது.