தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில வாரங்களிலேயே தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புரெவி புயல் காரணமாக 4 நாட்கள் வரை பெய்த மழை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியது.
ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்தது, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அதே நேரம் சாகுபடிக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
மழை மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“அடுத்த 48 (12.12.2020 & 13.12.2020) மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்: ஏதுமில்லை”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.