இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் இன்றளவும் முன்னணி நடிகர். அவர் திரையுலகில் இருக்கும்போதே அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருந்த ரஜினிகாந்த், இறுதியாக நவ.30 அன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் திடீரென டிசம்பர் 3 அன்று ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31 அறிவிப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து உறுதிப்படுத்தினார். இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று ரஜினியின் 70-வது பிறந்த நாள். அவர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதால் ரசிகர்கள் கூடுதல் கொண்டாட்டத்துடன் உள்ளனர்.
அவருக்கு பிரதமர் மோடி தொடங்கி, ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்தியில், “மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அலைபேசியில் தொடர்புகொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளது.