வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி நிதியை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி நிதியும் சென்னை முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு விற்றதன்மூலம் கிடைத்த ரூ.7.37 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கூறி அவர்களுக்கு எதிராக வருமானவரித் துறை வழக்கு தொடர்ந்தது.
சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், நிதி தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘‘வருமானவரி மதிப்பீட்டு நடைமுறைகளை மனுதாரர்கள் முழுமையாக முடிக்கும் முன்பாகவே அவர்களுக்கு எதிராக வருமானவரித் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம், நிதி ஆகிய இருவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.