தமிழகத்தில் வறண்ட வானிலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை நிறைவடைகிறதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
வழக்கமாக அக்.20 தேதி வாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக அக்.28-ம் தேதி தொடங்கியது.
இருப்பினும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யாத நிலையில், கடந்த மாத இறுதியில் உருவான ‘நிவர்’ புயல், இம்மாததொடக்கத்தில் உருவான ‘புரெவி’புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
வடகிழக்குப் பருவ காலத்தின் இறுதியில், வழக்கமாக தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இல்லாமல் இருந்தால் பருவமழை விலகிவிட்டதாக வானிலை மையம் அறிவிக்கும்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை விலகத் தொடங்கிவிட்டதா என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
வழக்கமாக பருவமழை காலத்தின் நடுவே இதுபோன்று மழை பெய்யாமல் இடைவெளி ஏற்படுவது வழக்கம். டிசம்பர் முடிய 20 நாட்கள் உள்ளன. அதற்குள் வானிலையில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். டிச.31-க்கு பிறகே பருவமழை விலகல் குறித்து அறிவிக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.