மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் வழக்கத்தை விட 60 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் குடிசைப் பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முதல்வர்பழனிசாமி உத்தரவின்படி, இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்காக 300 இடங்களில் சமைக்கப்படுகிறது.
நிவர், புரெவி புயல்களால் சென்னையில் 23 பகுதிகள் தண்ணீர் தேங்கும் இடமாக உள்ளன. பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார வல்லுநர்கள் மூலமாக அப்பகுதிகளில் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, பெரும்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழைநீர் சுமார் 1.5 டிஎம்சி நீர் அளவுக்கு இப்பகுதிகளுக்கு வந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க 5 நீர்வழி தடங்களை 24 கி.மீ நீளத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 வழித்தடங்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்ளும் நாவலூர், தாழம்பூர் பகுதிகளில் பொதுப்பணித் துறை சார்பிலும் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் 50 செ.மீ மழை பெய்தாலும், தென் சென்னையில் இனி நீர் தேங்காது. மேலும் வில்லிவாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 21 பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் புதிதாக கரோனா தொற்று சுமார் 400-க்கும் கீழே பதிவாகி வருகிறது. விரைவில் பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை எட்ட உள்ளது. அடுத்தகட்டமாக கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.