சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை தமிழக அரசு உடனே அகற்ற வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி சென்னைதெற்கு மாவட்ட திமுக செயலாளர்மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி முன்பு திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன். தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சுங்கக்சாவடிகளை அகற்றக் கோரி கடந்த பிப்ரவரி 10-ம் தேதிமக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் வேறுஎந்த மாநகராட்சி எல்லைக்குள்ளும் சுங்கச்சாவடி இல்லை. சென்னையில் இருப்பது வியப்பாக உள்ளது. மாநில நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இருந்தால் அதை தமிழக அரசுதான் அகற்ற வேண்டும் என்றார். சென்னைக்குள் இருக்கும் 8 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. எனவேதான் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
பின்னர் தயாநிதி மாறன் கூறும்போது, ‘‘திமுக தலைவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்ட எந்தவழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. டெல்லியில் போராடும் விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவில்லை. கரோனா காலத்தில் பல்லாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தேவையற்றது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்கிறோம்" என்றார்.