கோப்புப்படம் 
தமிழகம்

புயல், மழைக் காலத்தில் பணி செய்யாத புதுவை அதிகாரி: சபாநாயகரிடம் அதிமுக கொறடா உரிமை மீறல் புகார்

செய்திப்பிரிவு

புயல், மழைக் காலத்தில் பணி செய்யாத அதிகாரி மீது சபாநாயகரிடம் அதிமுக கொறடா உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, சபாநாயகர் சிவகொழுந்துவிடம் நேற்று அளித்த உரிமை மீறல் கடித விவரம்:

புயல், மழையால் முத்தியால்பேட்டை தொகுதியில் கருவடிக்குப்பம் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட சேதம் காரணமாக திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக புகார் தெரிவித்தேன். கடந்த 24.11.2020 பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது உடனிருந்த உதவி பொறியாளர் பாவாடை என்பவரிடம் 4 அடி உயரத்திற்கு மணல் மூட்டைகளை அடுக்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் வராமல் தடுக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உத்தரவிட்டார். மறுநாள் உதவி பொறியாளர் பாவாடை, மணல் மூட்டைகளை ஒரு வரிசை மட்டும் வைத்தார். இதனால் தொடர்ந்து வெள்ளநீர் உட்புகுந்து கொண்டிருந்தது. இதனையடுத்து உதவி பொறியாளரை 25 முறைக்கு மேல் அழைத்து அதிகாரிகள் கூறியதுபோல மணல்மூட்டைகளை அமைக்க முயற்சித்தேன். ஆனால் உதவி பொறியாளர் எனது போனை எடுத்து பதிலளிக்கவும் இல்லை. அதிகாரிகள் உத்தரவிட்டதுபோல பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் இல்லை.

உதவி பொறியாளரின் அலட்சியம் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எம்எல்ஏ என்ற அடிப்படையில் உதவி பொறியாளர் பாவாடை மீது உரிமை மீறல் புகார் அளிக்கிறேன். பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய மறுத்த உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்தக் கடிதத்தை உரிமை மீறல் விசாரணை குழுவுக்கு சபாநாயகர் அனுப்பியுள்ளார்.

உதவி பொறியாளரின் அலட்சியம் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

SCROLL FOR NEXT