விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து அரசு பல் மருத்துவக் கல்லூரியும் 5 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் விருதுநகரில் ரூ.100 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப் படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து 2017-ல் ரூ.50 கோடியில் விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், அரசுமருத்துவக் கல்லூரி இல்லாதநிலையில் அந்த அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஆண்டில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்க மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட விளையாட்டரங்கு எதிரே உள்ள இடத்தில் ரூ.380 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரியில் திறப்புவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி யுள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கென சிறப்பு அலுவலராக சென்னை பல் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஜெயச் சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது தொடர்பாக சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் விருதுநகரில் ஆட்சியர் இரா.கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகிலேயே 5 ஏக்கரில் அரசு பல் மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்த இடத்தை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது அரசு மருத்துவமனை டீன் திருவாசகமணி, அரசு பல் மருத்துவக் கல்லூரி சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன், மருத்துவ பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் நாகவேலு உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.