திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளாத உறுப்பினர்கள்/ சங்கங்கள் அனைவரும் விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் கடம்பூர்ராஜூ இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கை:
"திரைப்படத் துறையினர் நலன் காப்பதற்கென தமிழக அரசால் அமைக்கப்பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களும் அவற்றின் பலன்களும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு இலவசமாக அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் சில அமைப்புசாரா சங்கத்தினர் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொண்டதைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட தீர்ப்புரையில் உறுப்பினர் சேர்க்கை குறித்து சில நெறிமுறைகள் வழங்கியதோடு குறிப்பிட்ட கால வரையறைக்குள் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதன் தொடர்ச்சியாக திரைத்துறையில் பணியாற்றிவரும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த அமைப்புகள் / சங்கங்கள் மூலம் விண்ணப்பங்களை வருகின்ற 05.11.2020 முதல் 20.11.2020 வரை 'உறுப்பினர் - செயலர், திரைப்படத் துறையினர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2' என்ற முகவரியில் சேர்த்திட வேண்டும்.
மேலும், ஏற்கெனவே பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் இதே முறையில் தங்கள் உறுப்பினர் பதிவை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாகவும், புயல், மழை ஆகியவற்றின் காரணமாகவும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பங்களை 20.11.2020-க்குள் ஒப்படைக்க இயலவில்லை. எனவே, இந்தக் காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும், என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து மேற்படி விண்ணப்பங்கள் பெறப்படும் நாளை 31.12.2020 அன்று மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது".
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.