மணிமுக்தா நதி அணையிலிருந்து வரும் 16-ம் தேதி முதல் 62 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கை:
"கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, 4,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மணிமுக்தா நதி அணையிலிருந்து 16.12.2020 முதல் 15.2.2021 வரை 62 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.