மதுரையில் மிக ஆபத்தான நிலையில் சாலையோரத்தில் மழைநீர் கால்வாய், சாக்கடைக் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் மழைக்காலத்தில் சாலையில் இந்தப் பள்ளம் தெரியாமல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் சென்னையைப் போல் பள்ளத்தில் விழுந்து யாரேனும் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன் மாநகராட்சி விழித்துக் கொண்டு கால்வாய்களை மூடுவதற்கும், அல்லது தடுப்பு சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்கு வடகிழக்குப் பருவமழை நடப்பு ஆண்டு ஒரளவு பெய்து வருகிறது.
சென்னையை போல் அடைமழையாக இல்லாமல் சாதாரணமாக பெய்யும் இந்த சிறிய மழைக்கே மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், பஸ்நிலையங்களில் மழைநீர் தெப்பம்போல் தேங்குகிறது.
பல வார்டுகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் தவித்தனர். தொடர்ந்து அடைமழையாக சில நாட்கள் பெய்ததால் மதுரையில் பெரும் மழை சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சென்னையைப் போல் பெரியளவுக்கு நீர் மேலாண்மை கட்டமைப்புகள், மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. அதனாலேயே, சாதாரண மழைக்கே பெரியார் பஸ்நிலையம் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்டது.
அதுபோல், பழங்காநத்தம், செல்லூர் போன்ற இடங்களில் உள்ள ரயில்வே கீழ் பாலங்கள் மூழ்கிவிடுகிறது. மாசி வீதிகள், நகரின் பிற சாலைகளில் ஸ்மார்ட் சிட்டிக்காக தோண்டிய பாதாள பள்ளங்கள், நிரந்தரமாக மூடப்படாமல் திறந்த வெளியில் காணப்படும் சாக்கடை கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் உள்ளன.
பெரிய மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, சாலை எது, கால்வாய் பள்ளம், தோண்டி மூடப்படாமல் உள்ள பள்ளம் எது எனத் தெரியாமல் உள்ளது.
கடந்த மாதம் மாசி வீதியில் குடைப்பிடித்துக் கொண்டு நடைபாதையில் நடந்து சென்ற ஒரு பெண் மணி ஸ்மார்ட் சிட்டிக்காக தோண்டி மூடாமல் விட்டுச் சென்ற 6 அடி பள்ளத்தில் விழுந்தார்.
அதை உடனே அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்ததால் அவரை மீட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுபோல் பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல் மக்கள் பள்ளங்களில் விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் பரிதாபங்கள் மதுரையில் தொடர்கின்றன.
இந்நிலையில் வைகை ஆற்றின் குறுக்காக சிமக்கமல் கல்பாலத்தில் இருந்து கோரிப்பாளையம் வரும் கல் பாலத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை செல்வதற்காக இடது புறமாக பிரியும் சாலையில் மழைநீர் கால்வாய் மூடப்படாமல் சாலைக்கு இணையாக மிக ஆபத்தான நிலையில் உள்ளன.
தடுப்புச் சுவரும் இல்லாததால் சாலையோரம் மழைநீர் கால்வாய் இருப்பது கூட வெளியே தெரியவில்லை. மழை பெய்தால் இப்பகுதியில் சாலையும், மழைநீர் கால்வாயும் தெரியாத அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.
அடிக்கடி வாகனங்களில் வருவோர் இந்த கால்வாயில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். மழை பெய்யாத காலத்தில் கூட இரவு நேரத்தில் வாகனங்களில் வருவோரும், நடந்த வருவோரும் இந்தப் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுவரை உயிர்ப் பலி எதுவும் ஏற்படாததால் இந்த கால்வாயின் ஆபத்து வெளிச்சத்திற்கு வரவில்லை. சென்னையில் சாலையில் பள்ளம் இருந்தது தெரியாமல் தவறி விழுந்து முதியவர் ஒருவர் பலியானார்.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுபோன்ற சம்பவம் மதுரையில் நடக்காமல் இருக்க, கோரிப்பாளையம் பகுதியில் சாலையோரம் செல்லும் இந்த ஆபத்தான கால்வாயை மூடுவதற்கும், அல்லது தடுப்பு சுவர் அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.