டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடத்தப்படும் என, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கை:
"மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐயும் முற்றாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 9 அன்று, 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தபோது மத்திய அரசு ஆணவப்போக்கோடு நடந்துகொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தைத் தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது.
டிசம்பர் 14 அன்று, டெல்லி மாநகரத்தின் அருகாமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கிப் புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் அறைகூவல் வந்துள்ளது.
கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி மாநகரத்தை முற்றுகையிட்டு உறுதியாகத் தொடர்ந்து போராடுகிறபோது அப்போராட்டத்தை ஆதரிக்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்திட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14-ம் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அகில இந்திய விவசாய சங்கக் கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில், நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14-ம் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனைக் கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக் கூடிய 'அதானி, அம்பானி பொருட்களைப் புறக்கணிக்கும்' இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.