தமிழகம்

பொன்விழா ஆண்டான 2021-ல் அதிமுக ஆட்சியில் இருக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

எஸ்.கோமதி விநாயகம்

அதிமுக தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு பொன்விழா ஆண்டான 2021-ல் அதிமுகவின் ஆட்சி தொடரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவிலேயே சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த மண் தூத்துக்குடி மாவட்டம்.

1981-ம் ஆண்டு 3 நாட்கள் நடந்த பாரதியார் நூற்றாண்டு விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

மேலும், மகாகவி பாரதியார் பெயரில் கூட்டுறவு நூற்பாலை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக பாரதியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கினார்.

ஒவ்வொரு தேர்தல் நேரத்தின்போது சிலர் கட்சி தொடங்குவதும், ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுவதும் இயற்கை தான்.

இது தமிழகம் வழக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிற நடைமுறை தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் சிலர் கட்சி தொடங்கினார்கள். ஆனால், சாதித்துக் காட்டிய எந்தக் கட்சியும் கிடையாது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 50 ஆண்டுகால வரலாற்றில் தொடங்கப்பட்ட கட்சிகளில் பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கினார். திமுகவில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட இயக்கமான அதிமுக மட்டும் இன்று 49 ஆண்டுகளைக் கடந்து, பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.

நீடித்து நிலைத்து நின்ற ஒரே இயக்கம் அதிமுக தான். 49 ஆண்டுகளில் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெருமை அதிமுகவுக்கு தான் உண்டு. 2021-ல் பொன்விழா கொண்டாட்டத்தின்போது எம்.ஜி.ஆர். உருவாக்கி கட்சியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியிலான ஆட்சியும் மலரும், தொடரும்" என்றார்.

SCROLL FOR NEXT