தமிழகம்

கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறதா?- முதல்வரை சந்திக்கும் வீர விளையாட்டு அமைப்பு ஆர்வலர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பொங்கல் பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களில் பராம்பரியமாக நடக்கிறது.

தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பு வாய்ந்தது.

இந்தப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை வருவார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது, அந்தத் தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசலில் ஆரம்பித்த போராட்டம், கன்னியாகுமரி முதல் மெரீனா பீச் வரை வரலாறு காணாத போராட்டமாக நடந்தது.

அதற்கு மையப்புள்ளியாக மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கிராம மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரையும், அதன் கிராமங்களும் சிறப்பு வாய்ந்தவை.

இதையடுத்து, அதிமுக அரசு, சட்டமன்றத்தில் தீ்ர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்து தற்போது தடையில்லாமல் இந்த போட்டி நடக்கிறது.

பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும் அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் உலகப் புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடக்கும்.

தற்போது இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு கரோனா வடிவில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது கரோனா தொற்று நோயின் பரவல் வேகம் குறைந்ததோடு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

பஸ்களில் கூட அரசு 100 சதவீதம் பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல், கிராமங்களில் வழக்கம்போல் விழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

அதனால், தமிழக அரசு வழக்கம்போல் பொங்கல் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டிற்கு அனுமதி வழங்கலமா? என்றும், அந்த கிராமங்களில் போட்டிகள் நடக்கும் நாளில் கோயில் மாடுகளை மட்டும் அவிழ்த்துவிட்டு சம்பிராதயத்திற்கு போட்டிகளை நடத்தலாம் என்றும் அரசு ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே வழக்குகள் தொடர்பாக ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோதே, தென் மாவட்ட மக்கள் உணர்வுப்பூர்மாக அதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினர்.

தற்போது கட்டுக்குள் வந்த கரோனா தொற்று நோயைக் காரணம் சொல்லி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தால் மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்பதால் அரசு வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்குதான் முயற்சி செய்யும் என கால்நடை பராமரிப்புதுறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்கள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வழக்கம்போல் தற்போதே தங்கள் காளைகளை தயார் செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், அதற்கான பயிற்சிகளை தற்போதே தொடங்கியுள்ளனர்.

விழா அமைப்பாளர்களும் போட்டிகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இன்னும் இந்த போட்டிகளை நடத்துவதற்கான எந்தத் தகவலும் வரவில்லை.

விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருப்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிறுத்தினால் அது ஆளும்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘கரோனா தாக்கம் குறைந்துவிட்டதால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மீட்கப்பட்ட ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வகளைத் தடைசெய்யக்கூடாது என்று முதல்வரை அடுத்த வாரம் சந்தித்து முறையிட உள்ளோம்.

ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம்தான் இருக்கிறது. போட்டி ஏற்பாடுகளைத் தற்போது தொடங்கினால்தான் சரியாக இருக்கும். ஆனால், அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்று தெரியவில்லை, ’’ என்றார்.

SCROLL FOR NEXT