சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் சரஸ்வதி அண்ணா குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் இருந்தன.
இதனால், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்வில் கடும் போட்டி நிலவியது.
கடந்த ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து கரோனாவால் மேலும் 6 மாதங்களாக தேர்தல் தள்ளிப்போனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டிச.4-ம் தேதி முதல்வர் வந்தார். முதல்வர் வருகையில் 4-வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இப்படி 4 முறை ஒத்திவைக்கப்பட்டத் தேர்தல் இன்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது. இரு அணிகளும் சமபலம் கொண்டிருந்ததால் விதிமுறைகளின் அடிப்படையில் குலுக்கல் நடத்தப்பட்டது.
காலையில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த குலுக்கலில் அதிமுக கவுன்சிலர் பொன்மணி பாஸ்கர் தேர்வானார். பிற்பகலில் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடந்த குலுக்கலில் அதிமுகவின் சரஸ்வதி அண்ணா வென்றார்.