சக்திதாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

இந்திய குடியரசுக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

செய்திப்பிரிவு

இந்திய குடியரசுக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (டிச.11) அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

"இந்திய குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிச.10) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சக்திதாசன் இளம் வயதில் சமூகப் பணியாற்ற ஆர்வம் கொண்டு, பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். ஷெட்யூல்டு இன மக்கள் விடுதலை என்ற ஒரு இயக்கத்தினைத் தொடங்கி மக்கள் பணியாற்றியவர்.

எம்ஜிஆர் அதிமுகவைத் தோற்றுவித்து, சட்டப்பேரவை மேலவைத் தேர்தலில் அதிமுகவின் முதல் வேட்பாளராக நிறுத்திப் பெருமைப்படுத்திய புகழுக்குரியவர் சக்திதாசன். ஜெயலலிதா, சக்திதாசனைக் கவுரவிக்கும் வண்ணம், 2004-ம் ஆண்டு அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சக்திதாசனின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சியினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT