ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கான மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து தனியார் மருத்துவர்கள இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை அலோபதி மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவர்கள்) செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், எல்லா மருத்துவத் துறைகளையும் இணைத்து ஒரே மருத்துவ முறையை (நவீன மருத்துவம், ஆயுஷ்) 2030-ம் ஆண்டில் கொண்டுவர உள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், கருங்கல், களியக்காவிளை, சாமியார்மடம், திங்கள்நகர், குளச்சல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதம் 400க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் கூறுகையில்; இந்திய மருத்துவத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் விதமாக மக்களின் உயிருடன் மத்திய அரசு விளையாட முன்வந்துள்ளது. எனவே இந்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும்.
இதற்காக அனுமதிக்கப்பட்ட குழுக்களைக் கலைக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்படிப்பை ரத்து செய்யவேண்டும்.
அடுத்த வாரம் மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அரசின் இதே தன்மை தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தை மேலும் தொடர்வோம் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 800க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டது.